Sunday, September 6, 2009

உணர்வுகளின் வெளிப்பாடு - விடுமுறையா?

உணர்வுகளின் வெளிப்பாடு - விடுமுறையா?


சமீப காலமாக எதெற்கெடுத்தாலும் விடுமுறை அறிவிக்கும் பழக்கம் தமிழக அரசால் கடை பிடிக்கப்படுகிறது. இட ஒதுக்கீடு பிரச்சனையா - அரசாங்க வேலை நிறுத்தம். காவிரி நீர் வரவில்லையா?- அரசாங்க வேலை நிறுத்தம். ஈழத்தமிழர் படுகொலையா? - அரசாங்க பொது வேலைகள் நிறுத்தம்!. அண்டை மாநில முதல்வர் மறைவா?- அரசு பொது விடுமுறை.
வேலை நிறுத்தத்தை கண்டித்து உச்ச நீதி மன்றம் தீர்ப்பு அளித்தாலும் கூட- அரசு வூழியர்கள் தன்னார்வத்தின் மிகுதியால் பணிக்கு வரவில்லை என்ற சப்பை கட்டு வேறு!
இப்படி தடுக்கி விழுந்ததற்கு எல்லாம் விடுமுறை அளித்தால் என்றுதான் வேலை செய்வது? (அரசு வூழியர்கள் என்று வேலை செய்தார்கள் என்று கேட்கபடாது!) இதே ரீதியில் சென்றால் விடுமுறை அளிக்காததை கண்டித்து விடுமுறை வேண்டும் என்று கோரிக்கை வரலாம்.
இப்படி அளிக்கும் விடுமுறைகளினாலும், வேலை நிறுத்தங்களினாலும் என்ன பயன் வந்துவிடப்போகிறது?
காவிரியில் நம் முதல்வரின் "தம்பி" அவர்கள் அண்ணனின் வேண்டுகோளை ஏற்று காவிரியில் கடல் போல் தண்ணீர் திறந்து விட்டாரா?.. அல்லது ஈழத்தில் தமிழர்களை கொல்வதை ராக்ஷ்ச பக்ஷே நிறுத்தி விட்டாரா?
நாம் இதுவரை எத்தனையோ போராட்ட வடிவங்களை பார்த்திருக்கிறோம், ஒத்துழையாமை இயக்கம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் - உண்ணா நோன்பு- கருப்புக்கொடி ஆர்பாட்டம்- ரயில்முன் தலை வைத்து படுக்கும் வீர தீர போராட்டம்- இப்படி எத்தனயோ பல-
ஆனால் நமது வடிவேலு பணியில் சொல்வதனால் "இது புதுசாவுல இருக்கு". இந்த வேலை நிறுத்த போராட்டங்கள் யாரை திருப்தி படுத்த? எல்லோரையும் வீட்டில் முடக்கி காமெடி டிவியையும் , புதுபடங்களலையும் பார்க்க வைத்து வியாபரத்தை பெருக்கவா? அல்லது டாஸ்மார்க்கில் அதிக வருவாய் ஈட்டவா?
இதுவரை வேலை நிறுத்தம் செய்து எதாவது உருப்படியாய் நடந்திருக்கிறதா? பத்து பைசாவிற்கு கூட பிரயோசனம் இல்லை!
அண்டை மாநில முதல்வர் மறைவு வருந்த தக்கது தான். அதற்காக அரசு அலுவலகங்களில் வெட்டியாக கதை பேசும் நேரத்தில் இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினால் போதாதா? (இவர்களை பேசாமல் இருக்க சொன்னால் தலை வெடித்து விடும் என்பது வேறு).
இப்போது விடுமுறை விட்டதால் துக்கத்தில் பங்கு கொள்கிறோம் பேர்வழி என்று வீட்டில் போய் Y S R அவர்கள் படத்தை மாட்டி ஒப்பாரியா வைத்தார்கள்? இல்லை துக்கம்- விடுமுறை என்று அறிவித்த முதல்வர் நேற்று முழுவதும் தமது டிவி சேனலில் "டொயிங்" "டொயிங்" என்று பிடில் வாசிக்கும் நிகழ்ச்சியை மட்டும் தான் ஒளி பரப்ப வேண்டும் என்று ஆணை பிறப்பிதாரா? கட்சி கொடி அரை கம்பத்தில் பறந்தால் நஷ்டம் இல்லையே? ஆனால் டொயிங் பிடில் வாசித்தால்? - யோசிக்க!!
ஒரு விடுமுறையால் என்ன லாபம்?-
மத்திய காங்கிரஸ் அரசிற்கு இணக்கமாக போவதாக காட்டி கொள்ளலாம்!
அரசு வூழியார்களை திருப்தி செய்யலாம். - இடை தேர்தல் பொது தேர்தல் நேரங்களில் இது உதவும்.
டாஸ்மார்க்கில் அதிக வருவாய்
மக்களை டிவி பார்க்க வைத்து காசு பண்ணலாம்.
யாருக்கு நஷ்டம் ?
நம் அனைவருக்கும் தான்!
நம்முடைய வரிப் பணத்தில் சம்பளம் வாங்குகிறவர்கள் அரசு வூழியர்கள் - இவர்களுக்கு தனிச்சையாக விடுமுறை அளிப்பது சரியா?
ஏற்கனவே இருக்கும் ஏகப்பட்ட விடுமுறைகள் போதாதா? ஓணம் பண்டிகைக்கு தமிழக அரசு விடுமுறை! - தமிழர் திருநாள் கார்த்திகை தீபத்திற்கு கூட இல்லை! கேரளா அரசு என்ன தமிழர் பண்டிகைகளுக்கு விடுமுறை அளிக்கிறதா?
தனியார் நிறுவனங்களிலும் , சுய தொழில் செய்பவர்களையும் சிந்தித்து பாருங்கள் வியர்வையை ரத்தாமாக்கி ஒவ் ஒரு நாளும் உழைக்கிறார்கள். தங்கள் வருவாயில் ஒரு பகுதியை நாடு முன்னேற வரி என்ற பெயரில் அரசிற்கு தருகிறார்கள்.
தனியார் நிறுவனங்களின் வூழியர்கள் பெற்ற தாயை மருத்துவ மனைக்கு கூட்டி செல்ல ஒரு நாள் விடுப்பு கேட்டல் கூட எத்தனை பேரிடம் ஏசு வாங்க வேண்டி இருக்கிறது தெரியுமா? இதெல்லாம் ஒரு பிழைப்பா என்று சில சமயம் வாழ்வே வெறுத்து விடும்!
ஆனால் நமது வரி பணத்தில் வூதியம் வாங்கும் அரசு வூழியர்களோ வருடம் முழுவதும் விடுமுறை மழையில் திளைக்கிறார்கள். உண்மையிலேயே சேவைத்துறையில் இருக்கும் இவர்களுக்கு தன் குறைவான விடுமுறை வழங்க வேண்டும்! ஆனால் இவர்கள் நமக்கு எஜமானர் போல் நடத்த படுகிறார்கள் . இந்த கொடுமையை என்னவென்று சொல்வது?
வேலை நிறுத்தத்தை கண்டித்து உச்ச நீதி மன்றம் தீர்ப்பு அளித்தாலும் கூட- அரசு வூழியர்கள் தன்னார்வத்தின் மிகுதியால் பணிக்கு வரவில்லை என்ற சப்பை கட்டு வேறு
அரசாங்கம் செய்பவர்கள் இனியாவது இப்படி வீண் - வெட்டி விடுமுறை அளிப்பதை தவிர்க்க வேண்டும். அரசு வூழியர்கள் அலுவலகங்கில் செய்வதே கொஞ்ச நேர வேலை தான். அதையும் இப்படி விடுமுறை அளித்து வீணாக்க வேண்டம்!
அரசு எவ்வழியோ குடிகள் அவ்வழி! - இதை நினைவில் கொள்ள வேண்டும்! இப்படியே நிலைமை சென்றால் "உகாண்டா உள்ளூர் பஞ்சயது தலைவர் இறந்ததால் - ஒரு மாதம் அரசு விடுமுறை!" என்ற அறிவிப்பு கூட வரலாம்! ஆச்சர்ய படுவதற்கு இல்லை!